
லிமாசோல்,
3 நாடுகளுக்கு பயணமாக புறப்பட்ட பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார். கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இம்மாநாடு, 17-ந் தேதி வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறை காரணமாக இந்தியா-கனடா இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த பின்னணியில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். அவரது பயண பட்டியலில் சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளும் உள்ளன.
3 நாடுகள் பயணமாக நேற்று அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில் அவர் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். தலைநகர் நிகோசியாவில் உள்ள விமான நிலையத்தில் அவரை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். சைப்ரசுக்கான 2 நாட்கள் பயணத்தில், அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொழில் அதிபர்களிடையே உரையாற்றுகிறார்.
இதனிடையே லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் கலந்து கொண்டனர். அப்போது மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
6 தசாப்தங்களுக்குப் பிறகு, ஒரே அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது நிகழ்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இன்று, உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டணம் அதாவது யுபிஐ மூலம் நடைபெறுகிறது. பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இதனுடன் தொடர்புடையவை. இதில் சைப்ரஸையும் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, அதை நான் வரவேற்கிறேன்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், உற்பத்தி பணியைத் தொடங்கியுள்ளோம். கடல்சார் மற்றும் துறைமுக மேம்பாட்டில் எங்கள் கவனம் உள்ளது. கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் உடைப்புக்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இதற்காக ஒரு புதிய கொள்கையும் கொண்டு வரப்பட உள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையும் வேகமாக முன்னேறி வருகிறது. புதுமை இந்தியாவின் பொருளாதார வலிமையின் வலுவான தூணாக சிவில் விமான போக்குவரத்து மாறியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதன் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சைப்ரஸ் மற்றும் கிரேக்க வணிக மற்றும் முதலீட்டு கவுன்சில் நிறுவப்பட்டதை நான் வரவேற்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக மாறக்கூடும். அனைவரும் அளித்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை எனது குழு கவனித்துள்ளது. ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதன் மூலம் இவற்றைப் பின்பற்றுவோம். இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/xHqDaeh
via IFTTT
0 Comments