இன்று பூத்தக் கவிதைகள்


11.05.2024

மனசாட்சி



மனதை ஆட்சி செய்யும் மந்திரவாதி.

உன்னோடு பயணிக்கும்  உற்ற நண்பன்.

கண்ணியமாய் உன்னை வழிநடத்தும் வழிகாட்டி.

மலர்ப்பாதையே காட்டும் மாண்புயர் மனிதன்.

இடித்து உரைக்கும் ஏமரா மன்னன்.

உன்னசைவுகளைப் படமெடுக்கும் புகைப்படக் கலைஞன்.

தெய்வம் நின்று திடமாய்க் கொல்லும்.

மனசாட்சி அன்றே அப்பொழுதே சொல்லும்.

மனசாட்சியை அடகு வைத்து மகிழ்வோர் உண்டு.

மனசாட்சியே தெய்வமென்று மகிழ்வோரும் உண்டு.



உள்ளினும் உள்ளம் சுடும்.


தாய்மொழியாம் தங்கத் தமிழை தன் நாவினில்

மாய்த்து அந்நிய மொழியினை அகத்திலேற்றி

சாய்த்த இளைஞர் கூட்டம் அறிவதெப்போ?

ஆய்ந்திடின் உள்ளினும் உள்ளம் சுடும்.



கல்லாமை காட்டிலும் கொடியது கள்ளுண்பது

கள்ளுண்பது  பெருங்குற்றமெனக்  காட்டுது மறை

கள்ளின்மேல் பற்று வைத்த பதர்களை

கல்லென்று உள்ளினும் உள்ளம் சுடும்.


சாதிக்கத் துடிக்கும் சாதனை யாளரை

சாதியின் பெயரால் சாய்த்துவிடும் சமூகம்

வீதியில் இறங்கி வேறுபாட்டை கூட்டுதே 

நாதியற்ற செயலை உள்ளினும் உள்ளம் சுடும்.



எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் 

பேரழகின் பிரம்மா

பட்டையுரிந்த நெட்டை மரம் போல்

பட்டாடையிழந்து பாழும் கட்டிடங்களாய் நிற்கும்

இயற்கையை உள்ளினும் உள்ளம் சுடும் 



 10.05.2024



செயற்கை நுண்ணறிவால் 
சீராய் வரைந்த படம்

இயற்கை அன்னையின் 
எழில்மிகு வேடம்

செயற்கையால் மேனி 
சிறப்பது இக்கணம்

இயற்கையாய் பூமி 
வளர்ப்பது  எங்கணம்

காற்றை மாசுபடுத்தி 
வெப்பத்தை மேடுறுத்தி
நீரை சுருக்கி
 மண்ணை மலடாக்கி
ஓசோனை ஓட்டையாக்கி
உலவிடும் மனிதா!

உன் ஏகபோக வாழ்க்கைக்கு
இயற்கையை அல்லவா 
கொள்ளையடிக்கிறாய்!

பூமித்தாயின் புடவையில்
பச்சைக்கு பதில்
வெள்ளையடிக்கிறாய்!

மற்ற உயிரினங்கள்
உனைப்போல் எல்லை மீறி
இடர் செய்கின்றதா?

நீதானே
விளையும் இடத்தில்
வீடுகள் விளைவித்து
விதவை ஆக்குகிறாய்!

விழித்துவிடு
உன் வாழ்க்கை கப்பல்
கரையேற
இயற்கை அன்னை
இன்புற வேண்டும்...




தலை கவிழும் நிலைக்கு
விலை போகாதே!
 
வானமே எல்லை
வருத்தப்படுவதில் பயனில்லை.
 
இருண்ட உருவங்களே 
வெளிச்சத்திற்கு வாருங்கள்
 
ஊடல் கொண்ட உள்ளங்களே
விட்டுக் கொடுங்கள்..
 
மோதல் ஏற்பட்ட இடைவெளியை
உடைத்து விடுங்கள்.
 
நேசிப்பை விட புரிதலை 
மேம்படுத்துங்கள்.

வசந்த காலமாய்
வாழ்க்கையைத் தொடங்குங்கள்.


 



Post a Comment

0 Comments