செய்திகள்

விசாகப்பட்டினம்,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ரவல் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். நிலைத்து ஆடிய இருவரும் அரைசதமடித்தனர்.

தொடக்க விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரதிகா 75 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் ஜெமினா 33 ரன்களும், ரிச்சா ஹோஸ் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 48.5 ஓவரில் இந்திய அணி 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அனபெல் சுதர்லாந்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 331 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். இதில் போப் லிட்ச்பீல்ட் 40 ரன்களில் கேட்ச் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய எலிஸ் பெர்ரியுடன் அலிசா ஹீலி ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அலிசா, இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

தொடர்ந்து சதம் விளாசி அசத்திய அலிசா ஹீலி, 21 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 142 ரன்கள் குவித்த நிலையில், ஸ்ரீசரணி பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ஆஷ்லி கார்ட்னர் 45 ரன்களும், தாலியா மெக்ராத் 12 ரன்களும் எடுத்தனர். எலிஸ் பெர்ரி 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/fsoaKcT
via IFTTT

Post a Comment

0 Comments