டெல்லி,
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்து வருகிறது.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக நாடு முழுவதும் வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 203 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ. 2 ஆயிரத்து 246.50 ஆக அதிகரித்துள்ளது. மேலும், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதேவேளை, பெட்ரோல் - டீசல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ரூ. 10 மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக நாட்டில் எரிசக்தி மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் இருப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யுமாறு மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும், எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றை ஏற்கனவே கொள்முதல் செய்யும் நாடுகளை தவிர வேறு நாடுகளிடமிருந்தும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
from dailythanthi https://ift.tt/vBZjsCK
via IFTTT
0 Comments