செய்திகள்

ஜெய்ப்பூர்,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 64-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ஷ் மறும் இங்லிஸ் அதிரடி துவக்கம் கொடுத்தனர். பவர்பிளே முடிவில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய இங்லிஸ் 23 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

8 ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 100-ஐ கடந்தது. அப்போது அதிரடியாக ஆடிய இங்லிஸ் 60(29) ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் மார்ஷுடன் பூரன் ஜோடி சேர்ந்தார். மார்ஸ் 25 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பூரன் 16(11) ரன்களில் அவுட்டாக பண்ட் களமிறங்கினார். இருவரும் அதிரடியாக ஆட ஸ்கோர் 200-ஐ கடந்தது. அப்போது பண்ட் ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் மார்ஷ் 96(57) ரன்களில் ரன் அவுட்டானார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 96(57) ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் யஷ் ராஜ் புஞ்ஜா 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனையடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்-சூர்யவன்ஷி களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 43(23) ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து சூர்யவன்ஷியுடன் துருவ் ஜுரேல் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அதிரடியாக விளையாடி லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அரைசதம் கடந்து அசத்திய சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். மறுபுறம் துருவ் ஜுரேல் 53(38) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.



from dailythanthi https://ift.tt/oS5h98s
via IFTTT

Post a Comment

0 Comments