திருப்பூர்,
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 50 சதவீத பங்களிப்பை திருப்பூர் வழங்கி வருகிறது. கடந்த மே மாதத்துக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் ஆடை சந்தையில் அமெரிக்கா மூன்றில் ஒருபங்கை கொண்டுள்ளது. வரி விதிப்பு மற்றும் வளைகுடா நாடுகளில் போர் சூழல் போன்றவை காரணமாக அமெரிக்காவின் ஆடைத்தேவை குறைந்ததால் இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகம் இந்த சரிவை சந்தித்து இருக்கிறது.
கடந்த மே மாதம் டாலர் அடிப்படையில் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 1,297 மில்லியன் டாலராகும். இது முந்தைய ஆண்டில் 1,511 மில்லியன் டாலராக இருந்தது. முந்தை ஆண்டை ஒப்பிடும்போது 14.2 சதவீதம் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்திய ரூபாய் அடிப்படையில் மே மாதம் ரூ.12 ஆயிரத்து 401 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.12 ஆயிரத்து 876 கோடிக்கு நடந்துள்ளது. இது 3.7 சதவீதம் சரிவை காட்டுகிறது.
கடந்த ஏப்ரல், மே மாதம் ரூ.23 ஆயிரத்து 734 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டில் ரூ.24 ஆயிரத்து 609 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 3.6 சதவீ தம் வர்த்தகம் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் அமெரிக்காவுக்கு 15 ஆயிரத்து 814 மில்லியன் டாலர் மதிப்பில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டில் 16 ஆயிரத்து 7 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9.5 சதவீதம் ஏற்றுமதி வீழ்ச்சியை காட்டுகிறது. இருப்பினும் இங்கிலாந்துக்கு 4.7 சதவீதம், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 6.4 சதவீதம், ஜெர்மனிக்கு 9.3 சதவீதம், ஸ்பெயினுக்கு 7.5 சதவீதம், இத்தாலிக்கு 11.5 சதவீதம், ஜப்பானுக்கு 23.3 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய போட்டி நாடுகளின் போட்டித்தன்மை, செலவு, உற்பத்தி திறன், சரக்கு போக்குவரத்து மற்றும் சந்தை அணுகல் போன்றவற்றை இந்தியா மேம்படுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
from dailythanthi https://ift.tt/KQBG4Xx
via IFTTT
0 Comments