செய்திகள்

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சென்னைக்கு நடைபயணமாக வந்துள்ளார்.

விஜய் மீது ஈர்ப்பு

உத்தரப்பிரதேசம், அலிகார் பகுதியை சேர்ந்தவர் அமன் (வயது 24). இவர் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். திரையிலும், நிஜத்திலும் மக்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் விஜய் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட அமன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற ஆசைப்பட்டார்.

2,700 கி.மீ. நடைபயணம்

இதற்காக, கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி தனது சொந்த ஊரான அலிகாரில் இருந்து சென்னை நோக்கி தனது நீண்ட நெடிய நடைபயணத்தை தொடங்கினார். கையில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தியபடி, தேசப்பற்றை வலியுறுத்தி சுமார் 6 மாநிலங்களை கடந்து, 2,700 கிலோ மீட்டர் தூரம் அவர் கால்நடையாகவே நடந்து வந்துள்ளார். சுமார் 25 நாட்கள் கடுமையான பயணத்திற்கு பிறகு, அமன் நேற்று சென்னை வந்தடைந்தார்.

அனுமதி மறுப்பு

சென்னை வந்த அவர், முதல்-அமைச்சர் விஜய்யை சந்திப்பதற்காக நேராக தமிழக அரசின் தலைமை செயலகத்திற்கு சென்றார். ஆனால், முதல்-அமைச்சரை சந்திக்க அவர் முன்கூட்டியே முறைப்படி அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தலைமை செயலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

வைரல் வீடியோ

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமன், "முதல்-அமைச்சர் விஜய் தேசிய அரசியலிலும் பங்காற்ற வேண்டும் என்பது எனது விருப்பம். அவரை சந்திக்காமல் நான் சென்னையை விட்டு திரும்ப மாட்டேன்" என்று நம்பிக்கையுடன் கூறினார். தலைமைச் செயலகத்தின் வெளியே தேசிய கொடியுடன் அந்த வாலிபர் காத்திருக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி பெரும் வைரலாகி வருகிறது.



from dailythanthi https://ift.tt/6NtfE5R
via IFTTT

Post a Comment

0 Comments