செய்திகள்

டுப்ளின்,

அயர்லாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் நிறைவு செய்தது.

3-0 என முன்னிலை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

அயர்லாந்து 298 ரன்கள்

இந்த நிலையில், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெல்பாஸ்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது.

ரஹ்மத் ஷா அபார சதம்

இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் சரிந்தாலும், ரஹ்மத் ஷா மற்றும் செதிகுல்லா அடல் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

செதிகுல்லா அடல் 112 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய கேப்டன் ரஹ்மத் ஷா 133 பந்துகளில் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 302 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.



from dailythanthi https://ift.tt/8jeVMGl
via IFTTT

Post a Comment

0 Comments