11.05.2024
மனசாட்சி
மனதை ஆட்சி செய்யும் மந்திரவாதி.
உன்னோடு பயணிக்கும் உற்ற நண்பன்.
கண்ணியமாய் உன்னை வழிநடத்தும் வழிகாட்டி.
மலர்ப்பாதையே காட்டும் மாண்புயர் மனிதன்.
இடித்து உரைக்கும் ஏமரா மன்னன்.
உன்னசைவுகளைப் படமெடுக்கும் புகைப்படக் கலைஞன்.
தெய்வம் நின்று திடமாய்க் கொல்லும்.
மனசாட்சி அன்றே அப்பொழுதே சொல்லும்.
மனசாட்சியை அடகு வைத்து மகிழ்வோர் உண்டு.
மனசாட்சியே தெய்வமென்று மகிழ்வோரும் உண்டு.
உள்ளினும் உள்ளம் சுடும்.
தாய்மொழியாம் தங்கத் தமிழை தன் நாவினில்
மாய்த்து அந்நிய மொழியினை அகத்திலேற்றி
சாய்த்த இளைஞர் கூட்டம் அறிவதெப்போ?
ஆய்ந்திடின் உள்ளினும் உள்ளம் சுடும்.
கல்லாமை காட்டிலும் கொடியது கள்ளுண்பது
கள்ளுண்பது பெருங்குற்றமெனக் காட்டுது மறை
கள்ளின்மேல் பற்று வைத்த பதர்களை
கல்லென்று உள்ளினும் உள்ளம் சுடும்.
சாதிக்கத் துடிக்கும் சாதனை யாளரை
சாதியின் பெயரால் சாய்த்துவிடும் சமூகம்
வீதியில் இறங்கி வேறுபாட்டை கூட்டுதே
நாதியற்ற செயலை உள்ளினும் உள்ளம் சுடும்.
எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும்
பேரழகின் பிரம்மா
பட்டையுரிந்த நெட்டை மரம் போல்
பட்டாடையிழந்து பாழும் கட்டிடங்களாய் நிற்கும்
இயற்கையை உள்ளினும் உள்ளம் சுடும்
2 Comments
அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteமது தீது
ReplyDeleteபோதை தலைக்கேற புத்தி தடுமாறும்
சோதனை சீரழிக்கும் சூழ்ந்து.!
குறட்பா
பெருவை கி.பார்த்தசாரதி