பெரியகுளம்,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நல்ல பட்ஜெட். 3-வது முறையாக பிரதமராகியுள்ள மோடி தலைமையிலான ஆட்சியின் இந்த பட்ஜெட் இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச்செல்லும். ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது சில காரணங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதில் கூட்டணி, அரசியல் என எவ்வித காரணங்களும் கிடையாது" என்று தெரிவித்தார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்திடம், பீகாரில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்படும் வெள்ள சேதங்களுக்கு மாநில அரசு கேட்கும் நிதியை ஒதுக்குவதில்லையே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "பாதிப்புகளுக்கு உரிய அரசாணையின் படி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய அரசு பார்ப்பதில்லை" என்றார்.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/ziOkPn6
via IFTTT
0 Comments