வாஷிங்டன்,
இந்தியாவை தங்களின் நெருங்கிய கூட்டாளி என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி அண்மையில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் அதிபர் புதினை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். ரஷியாவுடன் இந்தியா நட்பு பாராட்டுவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் மோடியின் இந்த பயணம் அமைந்தது. இதனால் மோடியின் ரஷிய பயணத்தை அமெரிக்க உன்னிப்பாக கவனித்தது.
இந்த நிலையில் வாஷிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் பாட் ரைடரிடம், மோடியின் ரஷிய பயணத்துக்கு பிறகு அமெரிக்கா-இந்தியா இடையேயான ராணுவ உறவு எப்படி உள்ளது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய பாட் ரைடர், "இந்தியா எங்களின் நெருங்கிய கூட்டாளி ஆகும். அந்த கூட்டாண்மையை தொடர்ந்து மேம்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார்.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/YAejKaT
via IFTTT
0 Comments