செய்திகள்

டெல்லி,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 913 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷியா சென்றார். அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் - ரஷியா இடையே போர் நடந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் குறுகிய கால இடைவெளியில் பிரதமர் மோடி பயணித்த நிகழ்வு உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போரை நிறுத்த இந்தியா தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தொலைபேசி மூலம் நடந்த இந்த உரையாடலின்போது உக்ரைன் போர் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், வங்காளதேச நிலவரம் மற்றும் அந்நாட்டில் சிறுபான்மையினர் குறிப்பாக இந்து மதத்தினர் பாதுகாப்பு குறித்தும் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.



from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/1RL8p9E
via IFTTT

Post a Comment

0 Comments