முல்தான்,
தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி முல்தானில் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக முனீபா அலி மற்றும் குல் பெரோசா ஆகியோர் களம் இறங்கினர். இதில் குல் பெரோசா (10 ரன்கள்) முதலில் அவுட் ஆனார். இதன்பின் சித்ரா அமீன் களம் இறங்கினார். முனீபா அலி - சித்ரா அமீன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் முனீபா அலி 45 ரன்னிலும், சித்ரா அமீன் 28 ரன்னிலும், அடுத்து வந்த நிதா தார் 29 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
தொடர்ந்து பாதிமா சனா மற்றும் அலியா ரியாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் பாகிஸ்தான் 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் சேகுகுனே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால், 182 ரன் எடுத்தால் வெற்றி பெறுவதோடு தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி ஆடியது.
அந்த அணியின் லாரா உல்வார்தத் மற்றும் தஜ்மின் பிரிட்ஸ் முதலில் களமிறங்கினர். எனினும், பிரிட்ஸ் 9 ரன்களில் வெளியேறினார். லாரா (36), அன்னெக் போஸ் (24), நதின் டி கிளெர்க் (12) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன்பின் சுனே லூவஸ் மற்றும் குளோ டிரையான் இணை சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சுனே (53) மற்றும் குளோ (30) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனினும், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 168 ரன்களே எடுத்திருந்தது. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமனில் உள்ளது.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/e3wpO78
via IFTTT
0 Comments