சென்னை,
சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மகா விஷ்ணு என்பவர் பேச்சாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தினார். மாணவிகள் மத்தியில் பேசிய மகா விஷ்ணு, மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனமான கருத்துக்களை தெரிவித்தார்.
மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம், மாற்றுத்திறனாளிகளாக பிறக்கவும் அதுவே காரணம் என்றும் கூறினார். மறுபிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கும் என்றும் கூறினார்.
அப்போது, மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகா விஷ்ணுவை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கேள்வி எழுப்பினார். அப்போது, ஆசிரியர் சங்கரை மிரட்டும் வகையில் மகா விஷ்ணு பேசினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மகா விஷ்ணு தலைமறைவு ஆனதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வீடியோ வெளியிட்டுள்ள மகா விஷ்ணு, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மகா விஷ்ணு கூறுகையில், "நாளை மதியம் 1.10க்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குவேன். அரசு பள்ளியில் உரையாற்றிய பின்னர் நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். தமிழ்நாடு காவல்துறை, இந்தியாவின் சட்டதிட்டங்கள் மீது மிக அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளேன்.
சென்னை வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளேன். இறைவனிடம் சரணாகதி அடைந்துவிட்டு உங்கள் அனைவரையும் வந்து சந்திக்க உள்ளேன். நாம் எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? இது ஓடி ஒளிவதற்கான விஷயமே அல்ல. ஓடி ஒளியக்கூடிய வகையில் என்ன தவறான கருத்தை நான் சொல்லிவிட்டேன்? தற்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/tSpxifJ
via IFTTT
0 Comments