செய்திகள்

சென்னை,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் நினைவாக, மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. 27-ம் தேதி மாநாடு தொடங்கும் முன்பு திடலின் எதிரில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார்.

இந்த நிலையில் மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாநாட்டுக்கான களப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் மாநாட்டு பணிகளுக்கென ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் செயல் வடிவ குழுக்கள் அமைக்கப்படுகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள குழு தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மாநாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

விஜய் அமைத்துள்ள மாநாட்டு குழுவில், ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஒரு ஒருங்கிணைப்பாளர், 12 குழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர பொருளாதார குழுவில் 3 பேரும், சட்ட நிபுணர்கள் குழுவில் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

மாநாட்டு வரவேற்பு குழுவில் 10, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் 14, சுகாதார குழுவில் 55 பேர், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவில் 104 பேரும், வாகன நிறுத்த குழுவில் 41 பேரும் இடம் பெற்றுள்ளனர். மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மகளிர் பாதுகாப்பு குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த பாதுகாப்பு மேற்பார்வை குழுவில் மாவட்ட தலைவர்களை ஒருங்கிணைப்பாளர்களாக கொண்டு 111 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேடை ஒருங்கிணைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, மாநாட்டு தீர்மான குழு, உபசரிப்பு குழு, பந்தல் அமைப்பு குழு, உணவு வழங்கல் குழுவினர் என 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுக்கான பணிகளை உடனே தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சட்ட நிபுணர்கள் குழுவினர், போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவினர் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.



from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil https://ift.tt/jnNGiAY
via IFTTT

Post a Comment

0 Comments