செய்திகள்

அல்ஜீர்ஸ்,

ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஜனாதிபதி திரவுபதி முர்மு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் நேற்று தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரையிலான நாட்களில் அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவுக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். இதன்பின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை முர்மு ஏற்று கொண்டார்.

அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார். இந்நிலையில், அல்ஜீரியா-இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதி முர்மு பேசினார். அவர் பேசும்போது, இன்றைய நிச்சயமற்ற உலக சூழலில், இந்தியாவின் விரைவான வளர்ச்சி கவனித்தக்க வகையில் அமைந்துள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை கணிப்பு மற்றும் எளிதில் வர்த்தகம் மேற்கொள்வது உறுதி செய்யப்படும் வகையிலான சீர்திருத்தம் சார்ந்த பொருளாதார கொள்கை ஆகியவற்றால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா போற்றத்தக்க வகையில் வளர்ச்சி கண்டு, 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்திற்கு உயர்ந்து உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி போன்று உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வேறு சில சீர்திருத்தங்களும் நாட்டில் உள்ளன. இதனால், இந்தியாவில் தொழில்களை எளிதில் நிறுவி, வளர்ச்சி காண முடிகிறது என்றார்.

தொடர்ந்து அவர், எங்களுடைய மேக் இன் இந்தியா மற்றும் மேக் பார் வேர்ல்டு திட்டங்களில் இணைய வரும்படி அல்ஜீரிய நிறுவனங்களை நான் வரவேற்கிறேன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருந்து, விண்வெளி, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட துறைகளில் பல விசயங்களை இந்தியா சாதித்துள்ளது. இந்த துறைகளில் நம்முடைய அல்ஜீரிய பங்குதாரர்களுக்கு எங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்று அவர் பேசியுள்ளார்.



from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil https://ift.tt/pIePhnX
via IFTTT

Post a Comment

0 Comments