செய்திகள்

சென்னை,

புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவிலுக்கு நவம்பர் 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை, பாரிமுனை, காளிகாம்பாள் கோவிலில் புதிய வெள்ளி தேர் செய்யும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காளிகாம்பாள் கோவில் வெள்ளித்தேர் 2025 மார்ச் 1-ந்தேதி பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும். கோவில்கள் பராமரிப்பை பொறுத்தவரை ஐகோர்ட்டு சுட்டிக்காட்டுகின்ற அனைத்து பணிகளையும் விரிவுபடுத்தி, அவற்றை நேர்த்தியுடன் செய்து நீதிபதிகளின் பாராட்டை பெறுகின்ற துறையாக இருக்கிறோம்.

கடந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தார்கள். இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. கிரிவல பாதையை மேம்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உணவு, தங்கும் வசதிகள், துப்புறவு பணிகள், மருத்துவ வசதி போன்ற அனைத்தும் செய்து தரப்படும்.

கவர்னர் எந்த சூழலில் எதை கையில் எடுத்தாலும் அதற்குண்டான உரிய பதிலை முதல்-அமைச்சர் கொடுப்பார். முதல்-அமைச்சர் எந்நாளும் பின்வாங்க மாட்டார். புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நவம்பர் 28-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil | Live Tamil News https://ift.tt/InAaSgL
via IFTTT

Post a Comment

0 Comments