சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 23-ம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி காலை, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளை அடையக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கரூர், ஈரோடு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil | Live Tamil News https://ift.tt/CBi6VDZ
via IFTTT
0 Comments