சென்னை,
வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையின் முக்கிய கடை வீதியான தியாகராய நகரில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ரங்கநாதன் தெரு முழுவதுமே மக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிப் போனது.
சிறு கடை முதல் பெரிய கடை வரையில் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு மக்கள் முண்டியடித்து கொண்டு பொருட்களை வாங்கினார்கள். புத்தாடை, வீட்டு உபயோக பொருட்கள், செருப்பு கடைகள், வாட்ச் கடைகள், பேன்சி ஸ்டோர்கள், பாத்திர கடைகள் என அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது.
கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தியாகராயநகரில் 7 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர்.
இதேபோல, வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலை, புரசைவாக்கம், பூக்கடை, பாண்டிபஜார் போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பாரிமுனை, சவுகார்ப்பேட்டை, மண்ணடி போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். வரும் 3 நாட்களுக்கும் நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் இதேபோலவே அதிக அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil | Live Tamil News https://ift.tt/iaZfOx4
via IFTTT
0 Comments