டெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் செழிப்பாக இருக்கிறது. விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இந்த கழிவு எரிப்பு மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றின் தரம் (AQI) 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது.
டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.
இந்த நிலையில், அதிகரிக்கும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
from Today Tamil News Live Updates | தமிழ் செய்தி | Latest Tamil News Online | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/MK8qa9E
via IFTTT
0 Comments