சென்னை,
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7½-6½ என்ற புள்ளி கணக்கில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் சென்னையை சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன் இந்த பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதனை தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நேற்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து வெற்றிக்கோப்பையை முதல்-அமைச்சரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார் குகேஷ்.
பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதல்-அமைச்சருக்கு குகேஷ் பரிசாக வழங்கினார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நம்ம சென்னை பையன் குகேசை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். சீன செஸ் சாம்பியனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் குகேஷ். அவரது பெற்றோரை போல நானும் இந்த நேரத்தில் மகிழிச்சியடைகிறேன். குகேஷ் கொடுத்த பேட்டியை நான் பார்த்தேன். விளையாட்டு குணத்தோடு மனஉறுதியுடன் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். நான் அவர் வெற்றிக்கு காரணமாக இன்னொரு விஷயத்தை பார்ப்பது, அவர் எப்போதும் புன்னகையுடன் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் அவரது குணமும் முக்கிய காரணம்.
7 வயதில் இருந்து செஸ் பயிற்சி பெற்று வருகிறார். 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். செஸ் பயிற்சி பெற ஆரம்பித்து 11 ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். இந்த வெற்றி மூலம் குகேஷ் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வந்துள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் தெற்காசிய அளவில் முதலிடம், 2 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார். இப்போது உலக செஸ் சாம்பியன் குகேசுக்கு கழக அரசு பரிசுத்தொகை வழங்குகிறது. இவை இரண்டும் தி.மு.க. அரசு சமயத்தில் நடைபெற்றது மகிழ்சி அளிக்கிறது.
நமது அரசின் கீழ், 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினோம். உலகம் முழுக்க பாராட்டினார்கள். உலக மகளிர் டென்னிஸ், ஸ்குவாஷ் உலக கோப்பை, உலக அலைச்சறுக்கு லீக், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள் என பல்வேறு போட்டிகளை நடத்தி உள்ளோம்" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், "இந்தியர்கள் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சியான தருணம். 1991 அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அதன் பிறகு 34 ஆண்டுகளுக்கு பிறகு குகேசுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
செஸ் என்றால் அது தமிழ்நாடு என இந்திய அளவில் இருந்து வருகிறது. இங்கிருந்துதான் முதல் சர்வதேச சாம்பியன், கிராண்ட் மாஸ்டர், வேர்ல்ட் ஜூனியர் சாம்பியன், வேர்ல்ட் சாம்பியன் போன்ற பலர் உருவாகி உள்ளனர். ஒரு திறமையான நபரை கண்டவுடன் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்தான் இந்திய செஸ் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. குகேஷை சிறுவனாக இருந்தபோது நான் சந்தித்தேன். அதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷ் குறித்து செல்ல வேண்டும் என்றால் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுதும் தன்னுடைய அமைதியான குணத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஒரு போட்டி முடிந்தவுடன் அடுத்த போட்டிக்கு தயாராகிக் கொண்டிருப்பார். அது தான் அவரிடம் என்னை கவர்ந்த குணமாக பார்க்கிறேன். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புதான் அவர் உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு காரணமாக அமைந்தது. இந்த நேரத்தில் குகேசின் பயிற்சியாளர்கள், அவரது பெற்றோர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
31 கிராண்ட் மாஸ்டர்கள், 2 உலக சாம்பியன்களை கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய அளவில் மட்டும் அல்ல.. உலக அளவில் கூட சொல்ல முடியும் செஸ் என்றால் அது தமிழ்நாடுதான். வரும் காலங்களில் இன்னும் அதிகமான வீரர்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் கூறினார்.
from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/H7c6zPA
via IFTTT
0 Comments