சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (30.11.2025) சென்னை, கிண்டி, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில், தொழுநோய் ஒழிப்பு தினம் 2025 முன்னிட்டு, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பின் தொழுநோய் கண்டறிதல் முகாமினை தொடங்கி வைத்து, தொழுநோய் விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு, தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தொழுநோய் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி விழா பேரூரையாற்றினார்கள். அவர் ஆற்றிய உரை வருமாறு:-
தொழுநோய் ஒழிப்பு தினம்
ஒவ்வொரு வருடமும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 அன்று தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் தொழுநோய் ஏற்படுகிறது. தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது. ஆரம்ப நிலையில் சிகிச்சையளித்தால் அங்க குறைபாட்டை தடுக்கலாம். தொழுநோய் பாதிப்பு இல்லாத குழந்தைகள் என்ற நிலையை ஏற்படுத்துதல், தொழு நோயால் ஏற்படும் அங்க குறைபாட்டை தடுத்தல், தொழுநோய் பரவாமல் தடுத்தல் ஆகியவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அன்றே கணித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் தொழுநோய்ப் பிச்சைக்காரர்களுக்கான மறு வாழ்வு இல்லத்தை 02.10.1971 அன்று திறந்து வைத்தார்கள். இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் சுமார் 80 முதல் 100 பேர் வரை தங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் அவர்களும் 26.04.2023 அன்று பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவிகளை வழங்கி, "தலைவர் கலைஞர் அவர்களின் 48வது பிறந்த நாள் விழாவின் போது பொதுமக்கள் மனமுவந்து அளித்த நிதியில் இருந்து கட்டப்பட்ட இந்த இல்லமானது விளிம்பு நிலை மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த அன்பின் வரலாற்றுச் சான்று!" என பதிவு செய்துள்ளார்கள்.
தொழுநோய் மருத்துவ முகாம்
இன்று முதல் (30.01.2025 முதல் 15.02.2025 வரை 15 நாட்கள்) தொழுநோய் சிறப்பு விழிப்புணர்வு முகாம் மூலம் குடிசை வாழ் மக்கள், தொழிலாளர்கள், பள்ளி குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தொழுநோய் கண்டறிதல் முகாம்கள் நடத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழுநோயால் குழந்தை பாதிப்பு, அங்க குறைபாடு மற்றும் தொழுநோய் பாதிப்பு அதிகம் உள்ள 133 வட்டாரங்களில், 27 நகரப்பகுதிகளில், 50,76,701 வீடுகளில், 2,01,08,585 மக்களுக்கு தொழுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் 13.02.2025 முதல் 28.02.2025 வரை 15 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்களை ஆண் பரிசோதகர்களும், பெண்களை பெண் பரிசோதகர்களும் வீடு வீடாக சென்று பரிசோதிக்க உள்ளனர். கடந்த வருடம் நடத்தப்பட்ட முகாமில் 320 புதிய தொழு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தொழுநோயாளார்களுக்கு உதவித் தொகை உயர்த்தப்பட்டது
தமிழ்நாடு முதல்-அமைச்சர் 40% மேல் அங்க குறைபாடு உள்ள தொழுநோயாளிகளுக்கு மாத உதவித் தொகையை 15.03.2022 அன்று ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி அறிவித்தார்கள். அதன்படி கடந்தாண்டில் மட்டும் ரூ.28.08 கோடி செலவில் 11,702 நபர்களுக்கு மாத மாதம் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.3.83 இலட்சம் செலவில் 15,759 சுய பாதுகாப்பு பெட்டகங்களும், ரூ.38 இலட்சம் செலவில் 9,462 MCR காலனிகள் மற்றும் 44,661 நபர்களுக்கு ஒரு ரிபார்ம்பிசின் மாத்திரைகளும், ரூ.11.76 இலட்சம் செலவில் 98 மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 10 தொழுநோய் மறுவாழ்வு இல்லங்களில் 1001 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 அரசு தொழுநோய் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சைகளும் கூட்டு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் மருத்துவக்கட்டமைப்புகள்
செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நான் உத்தரப்பிரதேசம் மாநிலம் சென்றிருந்தேன். குறிப்பாக ஆக்ரா பகுதியில் தொழுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று இருந்தது. அங்கு சென்று விசாரித்தேன், அவர்கள் சொன்னார்கள், இந்தியாவிலேயே அதிக தொழுநோய் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள் என்று. இங்கு ஆராய்ச்சி மையம் எல்லாம் இருக்கிறது என்று சொன்னார்கள். இன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொழுநோய் இல்லா தமிழ்நாடு எனும் இலக்கை அடைவதற்கு இந்த துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையும் தொழுநோய் இல்லா இந்தியா எனும் இலக்கை அடைவதற்கு பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை, ஆராய்ச்சிகளை, கூட்டு நடவடிக்கைகளை விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
தொழுநோயாளிகள் பாதிப்பு விவரங்கள்
இந்தியா முழுவதும் 10,000 மக்கள் தொகையில் 0.6 % பேர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுவே தமிழ்நாட்டை பொறுத்தவரை 0.3% பேர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததை தற்போது 0.27% பேராக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் குழந்தை தொழு நோயாளிகளின் 5.18% ஆக உள்ளது. இதுவே தமிழகத்தில் 5.79 % ஆக இருந்ததை தற்போது 5.37% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் அங்க குறைபாடு உள்ளவர்கள் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு 1.6% ஆக உள்ளது. தமிழகத்தல் 0.9% ஆக இருந்தது, தற்போது 0.35% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்கள்
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தொழுநோய் பரிசோதனை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் தோல் சிகிச்சை நிபுணர்கள், தொழுநோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இது நோயாளிகளுக்கு சிகிச்சை செலவு இல்லாத நிலைமை ஏற்படுத்தும். உங்கள் பகுதிகளுக்கு வரும் சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, ஒரு நபருக்கு ஒரு மாத்திரை (ரிபார்ம்பிசின்) நோய் தடுப்பு திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.இராஜமூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு.துரைராஜ், மாமன்ற உறுப்பினர் திரு.மோகன்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழுநோய்) கூடுதல் இயக்குநர் மரு.வே.தர்மலிங்கம், செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர்.வி.மலர்விழி, உயரலுவலர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | News In Tamil | Live Tamil News - Daily Thanthi | Tamil News Paper | Breaking Tamil news https://ift.tt/NTeK0wo
via IFTTT
0 Comments