
ஒட்டோவா,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனடா மற்றும் மெக்சிகோ உடனடியாக எதிர்வினையாற்றின. அதன்படி 155 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
இந்தநிலையில், கனடா பிரதமர் ட்ரூடோ ஓட்டோவாவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
நார்மண்டி கடற்கரை முதல் கொரிய தீபகற்பத்தின் மலைகள் வரை ப்ளாண்டர்ஸ் நிலப்பரப்பு முதல் காந்தஹார் தெருக்கள் வரை உங்களின் இருண்ட காலங்களில் உங்களுடன் நாங்களும் இணைந்து போராடி இறந்துள்ளோம்.
கடந்த காலங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவற்றைக் கடந்து செல்வதற்கான வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம். நான் முன்பே கூறியது போல, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு பொற்காலத்தை கொண்டு வர விரும்பினால், அதற்கு சிறந்த வழி கனடாவுடன் கூட்டு சேர்வதே தவிர எங்களைத் தண்டிப்பது இல்லை. கனடாவுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தும். அமெரிக்க வாகனங்கள் உருவாக்கும் ஆலைகள் மற்றும் பிற உற்பத்தி வசதிகளை மூடுவதற்கு வழி வகுக்கும். அவை மளிகைக் கடையில் உங்களின் உணவுப்பொருட்கள் மற்றும் எரிவாயுக்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | News In Tamil | Live Tamil News - Daily Thanthi | Tamil News Paper | Breaking Tamil news https://ift.tt/Yyj5Le1
via IFTTT
0 Comments