வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தீவிரம் காட்டி வருகிறார். அதே வேளையில் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளுக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக கடந்த மாதம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா நிறுத்தியது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா-உக்ரைன் இடையே வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்த பின் அமெரிக்கா-உக்ரைன் கூட்டு அறிக்கையை வெளியிட்டது.
அதில், "அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. இந்த போர் நிறுத்தக் காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம். இது ரஷிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே அமலுக்கு வரும்" என கூறப்பட்டது. இதனிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷியா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும் ரஷியா தரப்பில் கூறப்பட்டது. புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் 30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் போரை நிறுத்த ரஷியாவும் உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புதின் இதனை ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தலையீட்டினால் உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
from Tamil News Live | Today News In Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | இன்றைய தலைப்புச் செய்திகள் https://ift.tt/RghoOKf
via IFTTT
0 Comments