
மதுரை,
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:-
எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நாங்கள் தனித்தனியாக வசிக்கிறோம். எங்களை சேர்த்து வைக்கக்கோரி என் மனைவி கரூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் நான் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கு தொடர்ந்தேன். இவற்றை விசாரித்த கரூர் கோர்ட்டு, என் மனைவியின் கோரிக்கையை அனுமதித்தும், என்னுடைய விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இது ஏற்புடையதல்ல. என் வழக்கை தள்ளுபடி செய்ததை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரருக்கும், அவருடைய மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும். அவர்கள் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். திருமணத்துக்கு பின்பு மனுதாரர் தன் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.அதாவது, அவருடைய மனைவிக்கு பாலியல் நோய் இருக்கிறது. வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. மாமியாரை துன்புறுத்துகிறார். தனிமையில் ஆபாச படங்களை பார்த்து சுயஇன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
மனுதாரரைப் பொறுத்தவரை, அதில் உண்மை இல்லாவிட்டால் எந்த கணவரும் அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்கள். ஆனால் அவரது மனைவியோ இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையில்லை என்கிறார்.
பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவருடன் குடும்பம் நடத்தியதால் தனக்கும் நோய் பரவியதாக கூறுவதற்கான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தை மனுதாரரின் மனைவி பார்ப்பதாக கூறுவதை மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது. திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும். இருப்பினும், திருமணமான பெண் சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை ஏற்படுத்துவதாகக்கூற முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை, உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரர் வழக்கில் கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
from Daily Thathi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/jIgnd8N
via IFTTT
0 Comments