செய்திகள்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த நிலையில், பா.ஜ.க. தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. 12 மணி நேரம் விவாதத்திற்கு பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்று, பின்னர் 2 மணியளவில் அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. இதனால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. எனினும், வக்பு நில ஆக்கிரமிப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குடும்பம் ஈடுபட்டு உள்ளது என மக்களவையில் குற்றச்சாட்டாக கூறப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இதுபற்றி மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய பா.ஜ.க. உறுப்பினரான அனுராக் தாக்குர், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் குடும்பத்தினர் வக்பு நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறினார்.

கர்நாடகாவின் முன்னாள் பா.ஜ.க. தலைவரான அன்வர் மணிப்பாடி, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் தாக்கல் செய்த வக்பு ஊழல் பற்றிய குற்றச்சாட்டு அறிக்கையில், கார்கேவின் தொடர்பு உள்பட பல்வேறு அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை குறிப்பிட்டு உள்ளார். இதனை சுட்டி காட்டி அனுராக் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் பதவியில் இருந்து விலக தயார் என கார்கே கூறினார். அப்படி குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் குற்றச்சாட்டை கூறிய உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சற்று நேரத்தில் வக்பு திருத்த மசோதா தாக்கலாக உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



from Daily Thathi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/EwChVsQ
via IFTTT

Post a Comment

0 Comments