
லீட்ஸ்,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு தண்ணி காட்டினர். 24.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார்.
அடுத்து அறிமுக வீரரான சாய் சுதர்சன் களமிறங்கினார். அவர் 4 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து கில் களமிறங்கினார்.
கில், ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். மறுபுறம் சிறப்பாக விளையாடி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் சதமடித்த 5வது இந்திய வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால். புதிய சாதனை படைத்தார்.
இதனையடுத்து. கில்லுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் சுப்மன் கில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். சுப்மன் கில் கேப்டனாக அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்தார். இதன்மூலம் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரரானார் சுப்மான் கில்.
அவரைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தற்போது இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் எடுத்துள்ளது. அதில் கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களும், ரிஷப் பண்ட் 65 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் சில விஷயங்கள் நட்சத்திரங்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளபதிவில், "சில விஷயங்கள் நட்சத்திரங்களில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.. டெஸ்ட் கேப்டனாக உங்கள் முதல் வெளிநாட்டு சதத்திற்கு வாழ்த்துக்கள் சுப்மன் கில்..
இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்.. மேலும் உங்கள் பேட்டை எல்லாவற்றையும் பேச அனுமதித்துள்ளீர்கள்.. சபாஷ் எல்லோருக்கும்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/SocTnVR
via IFTTT
0 Comments