செய்திகள்

அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் கண்மூடித்தனமான மோடிப்பற்று, தமிழர் நலனை காவு கொள்கிறதா? பிரதமர் மோடி மீது முன்வைக்கப்பட்ட நியாயமான விமர்சனத்தின் மீது தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபம்:-

நமது சகோதரர்களான இஸ்லாமியர்களை பிரதமர் மோடி 2024 தேர்தல் நேரத்தில், வரிந்துகட்டிக் கொண்டு 110 மேடைகளில் வார்த்தை ஆயுதங்களால் கடுமையாக தாக்கினாரே, அப்போது இதே கோபம் உங்களுக்கு ஏன் வரவில்லை? இஸ்லாமியர்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு முன்னெடுத்த வக்பு, CAA விவகாரங்களில், மோடி மீது கோபம் வராதது ஏன்?

தமிழர்கள் கர்நாடகாவுக்கு வந்து வெடிகுண்டு வைக்கின்றனர் என தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து மத்திய மந்திரி ஷோபா பேசியபோது, கோபம் வராதது ஏன்? தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா? தமிழரான பாண்டியனை ஒருபோதும் நாங்கள் ஏற்கவும் முடியாது; பொறுத்துக் கொள்ளவும் முடியாது என ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்திய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீது கோபம் வராதது ஏன்?

ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவில் புதையல் சாவியை தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர் என்று தமிழர்களை திருடர்களாக பிரதமர் நரேந்திர மோடி சித்தரித்தாரே, அப்போது கோபம் வராதது ஏன்? தமிழ் மொழியை விட மூத்த மொழி சமஸ்கிருதம்தான் என நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்பி நிஷிகாந்த் துபே பொய்பரப்பும் போது கோபம் வராதது ஏன்?

திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தமிழர்களை, சாதியுற்பத்தி-மதத்திற்குள் அடைக்க பல பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி செய்யும்போது, கோபம் வராதது ஏன்? நமது தமிழுக்கு ஓரவஞ்சனை காட்டி, சமஸ்கிருதத்திற்கு கோடிகோடியாக வாரி இறைத்தாரே, அப்போது ஏன் கோபம் வரவில்லை? நமது சகோதர இந்துக்களும், இஸ்லாமியரும் பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர், அவர்களை பாதுகாக்கத் தவறிய மோடி அரசின் மீது கோபம் வராதது ஏன்? அமெரிக்காவிடம் சரணடைந்தாரே, அப்போது ஏன் கோபம் வரவில்லை?

அ.தி.மு.க. ஊழல் கட்சி என்றனர், தற்போது கூட்டணி வைத்திருக்கின்றனரே, இதன் மீது ஏன் கோபம் வரவில்லை? தான் மனித பிறவி அல்ல, கடவுள் அவதாரம் என கடைந்தெடுத்த பொய்யை கட்டவிழ்த்து விட்டாரே, அப்போது ஏன் கோபம் வரவில்லை? இவற்றுக்கெல்லாம் கோபம் வராத பா.ஜ.க.வினருக்கு, உண்மையை சொல்லும்போது மட்டும் கோபம் வருவதில் ஏதோ கோளாறு இருக்குமோ? என்ற ஐயம் உருவாகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Rl0ZDVj
via IFTTT

Post a Comment

0 Comments