கோவை,
9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஸ்டேடியத்தில் 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணிசார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் அபிஷேக் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விவேக் 2 ரன்னும், கவின் 3 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹரி நிஷாந்த், சன்னி சந்து ஜோடி அதிரடியில் கலக்கியது.
இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரி நிஷாந்த் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 83 (58) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹரிஷ் குமார் 1 ரன்னும், அதிரடியாக ரன் சேர்த்த சன்னி சந்து 45 (27) ரன்களும், கவுரி சங்கர் 4 ரன்னும், ராஜகோபால் 11 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. திருச்சி அணியின் சார்பில் அதிகபட்சமாக அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் சிவசங்கரன் மற்றும் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். இதில் சுஜய் 4 ரன்களிலும் ஜெயராமன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக வசீம் அகமது மற்றும் ஜெகதீசன் கவுசிக் ஜோடி சேர்ந்தனர். இதில், வசீம் அகமது 16 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய முகிலேஷ் 2 ரன்களிலும் , சஞ்சய் யாதவ் 11 ரன்களிலும், ஜாபர் ஜமால் 2 ரன்களிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து ஜெகதீசன் கவுசிக்குடன் ஜோடி சேர்ந்தார் ராஜ்குமார். அதிரடி காட்டி அரைசதம் அடித்த அவர் 59 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சரவண குமார் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டநிலையில், அதிரடியாக ரன் சேர்த்த ஜெகதீசன் கவுசிக் 62 (39) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் திருச்சி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி திரில் வெற்றி பெற்றது. சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக மொஹமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/n9ihWqj
via IFTTT
0 Comments