
திண்டுக்கல்,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா- அமித் சாத்விக் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். திண்டுக்கல் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி அணியின் ரன் வேகத்தை சீராக உயர்த்தியது. வெறும் 10.4 ஓவர்களில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அரைசதம் அடித்து அசத்திய அமித் சாத்விக் 65 ரன்களில் (34 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் கிஷோர் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த துஷார் ரஹேஜாவும் 77 ரன்களில் (46 பந்துகள்) ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறிது அதிரடி காட்டிய முகமது அலி 23 ரன்களில் (14 பந்துகள்) வருண் சக்ரவர்த்தி சுழலில் சிக்கினார். இறுதி கட்டத்தில் சசிதேவ் ( 20 ரன்கள்) மற்றும் அனோவங்கர் (25 ரன்கள்) அதிரடியாக விளையாட திருப்பூர் அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 220 ரன்கள் குவித்தது. திண்டுக்கல் தரப்பில் கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் அஸ்வின் (1) , பாபா இந்திரஜித் (9), விமல் குமார் (10), தினேஷ் (3) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திண்டுக்கல் அணி 14.4 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/PxFhjYa
via IFTTT
0 Comments