
சென்னை,
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய ஒரு குழுவை அமைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டார். இந்த விருது கடந்த 4 ஆண்டுகளில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான நடப்பாண்டு விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மூத்த அரசியல் தலைவரும், கருணாநிதியின் அன்புக்குரியவருமான, மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
இவர் அறிவார்ந்த சொற்பொழிவாளர், கோவையில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டுக்கும், அரபு நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.
8 ஆண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் 'தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்த மதமா?' எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இஸ்லாமிய இறைக்கோட்பாடு உள்பட 6 புத்தகங்களை எழுதியவர். மேலும் அவர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.
கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார். 'தகைசால் தமிழர் விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொய்தீனுக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/0B5Xsnw
via IFTTT
0 Comments