வயநாடு,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி தாலுகா சேக்காடி பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் அகழி அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது வயநாடு பகுதியில் தொடர் கனமழை பெய்வதால், அகழி மண் நிறைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் பிறந்து 20 நாட்களே ஆன குட்டி யானை ஒன்று அகழியில் சிக்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து குட்டி யானையை மீட்டனர். பின்னர் மறுபக்கம் உள்ள வனப்பகுதியில் சற்று தொலைவில் நின்றிருந்த தாய் யானையுடன் குட்டியை பல கட்டமாக முயற்சி செய்து சேர்த்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர். இந்தநிலையில் சேக்காடி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பாடங்கள் படித்து கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளி வளாகத்துக்குள் குட்டி யானை திடீரென நுழைந்தது. இதை கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வகுப்பறைக்குள் குட்டி யானை நுழையாமல் இருக்க, அனைத்து கதவுகளும் மூடப்பட்டது. இருப்பினும் குட்டி யானை கட்டிடத்தின் வரண்டாவில் ஓடியவாறு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து வலை மூலம் குட்டி யானையை மடக்கி பிடித்து ஜீப்பில் ஏற்றினர். பின்னர் வனப்பகுதிக்குள் குட்டி யானையை கொண்டு சென்றனர். இதையடுத்து தாய் யானையுடன் குட்டியை சேர்க்க திட்டமிடப்பட்டு, தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/wF8itTx
via IFTTT
0 Comments