சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர், நடிகைகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 13-வது நாளாக தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே, அனுமதிக்கப்படாத இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அடுத்து, தூய்மை பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் நேற்று 8-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர்கள், “இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் 13-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர். கோர்ட்டு உத்தரவை மீறி மாநகராட்சி அலுவலகம் அருகே போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதனால், காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என கூறப்படுகிறது.
அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் அந்த பகுதியில் குவிந்திருந்தனர். இந்நிலையில், தூய்மை பணியாளர்களில் 800 பேர் முதல் 900 பேர் வரை கைது செய்யப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் ஏற்றி வேறு, வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது, சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், தேசிய கொடி, கம்யூனிஸ்டு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் தொடரலாம் என கோர்ட்டு கூறியிருந்த நிலையில், பணி நிரந்தரம் கோரி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில், போராட்டம் நடந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/eNUGoyi
via IFTTT
0 Comments