செய்திகள்

சென்னை,

'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

மேலும் அவர் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களுடன் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீடுகளை ஈர்த்தார்.

பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 2-ந்தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். இதன் மூலம் 7 நிறுவனங்களுடன் ரூ.8 ஆயிரத்து 496 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. ஜெர்மனி மற்றும் லண்டனை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அயலக தமிழர்களை சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி அவர், ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

'சட்ட மேதை' அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். 'தத்துவ ஞானி' என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். துபாய் வழியாக அவர் இன்று காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து, 'ஜெர்மனி, லண்டனில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை பட்டியலிடுவார் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக ஐரோப்பிய பயணத்தை நிறைவு செய்து தாயகம் திருப்புவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய 'டி.என்.ரைசிங்' பயணம் லண்டன் மாநகரில் தமிழர்கள் வாழ்த்தி வழி அனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக் கொண்ட புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/2Ob3FIj
via IFTTT

Post a Comment

0 Comments