தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் மாற்றுவது கல்வி என்பதன் அடிப்படையில் தரமான மற்றும் கட்டணமில்லாக் கல்வியை வழங்கியதோடு, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தினார் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இதன் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், இந்த நிலை தற்போது மாறி, உயிரை பணயம் வைத்து பள்ளிகளுக்கு மாணவ மாணவியர் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தது; ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகில் உள்ள வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததன் காரணமாக இரண்டு மாணவர்கள் காயமடைந்தது; செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு நடுநிலைப் பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், பயன்பாட்டிற்கு வந்த மூன்றே மாதத்தில் அந்த வகுப்பறையின் மேற்கூரை விழுந்து ஐந்து மானாவ மாணவியர் படுகாயம் அடைந்தது;
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கூகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்ட ஓர் ஆண்டிற்குள்ளேயே இடிந்து விழுந்தது என்ற வரிசையில் தற்போது திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிங்களாந்தபுரம் ஒன்றிய துவக்கப் பள்ளியில் நேற்று காலை வகுப்பறைகள் திறக்கப்பட்டபோது ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை நடக்கும் அறையின் கான்க்ரீட் கூரை பெயர்ந்து விழுந்ததன் காரணமாக மாணவர்களின் இருக்கைகள், கல்வி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இது மாணவர்கள் கல்வி பயிலும் நேரத்தில் நடைபெற்று இருந்தால் இளம் பிஞ்சுகள் பலத்த காயமடைந்திருப்பார்கள்.
மேற்படி பள்ளி வகுப்பறை கட்டி ஒன்பது மாதங்களே ஆன நிலையில் இதுபோன்றதொரு விபத்து நடைபெற்று இருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களில் அதன் மேற்கூரை இடிந்து விழுகிறது என்றால் அந்த அளவுக்கு ஊழல் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது என்றுதான் பொருள்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ மாணவியரின் படிப்பினை, பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய அரசே அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவர்களது கல்வியை பாழாக்குகிறது என்பது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இந்த நிலையில் பள்ளிகள் இருந்தால், பெற்றோர்கள் எப்படி குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவார்கள்?
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மயிலாடுதுறை அருகே பொன்செய் கிராமத்தில் ரேஷன் கடை கூரை பெயர்ந்து விழுந்து அந்தக் கடையின் விற்பனை உதவியாளர் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக மொத்தம், அரசுக் கட்டடம் என்றால் அது அபாயகரமான கட்டடம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மேற்படி பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழும் அளவுக்கு தரமற்ற கட்டுமானப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பழுதடைந்துள்ள அரசுக் கட்டடங்களை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/qey1s8P
via IFTTT
0 Comments