செய்திகள்

வாஷிங்டன்,

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார், இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. டிரம்பின் இந்த முடிவால் இந்தியா தற்போது சீனாவிடம் வர்த்தக உறவை வலுவாக்க தொடங்கி உள்ளது. அதேபோல, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகள் மத்தியில் பேசப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓரிரு மாதங்களில் அமெரிக்காவிடம் இந்தியா மன்னிப்பு கேட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் என்று அந்நாட்டு வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “இந்தியா தனது சந்தையை திறக்க விரும்பவில்லை, ரஷியாவிலிருந்து வாங்குவதை நிறுத்த விரும்பவில்லை, பிரிக்ஸ் குழுவிலிருந்து வெளியேற விரும்பவில்லை. அவர்கள் [இந்தியா] ரஷியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான ஒரு உறவாகி உள்ளனர். நீங்கள் அப்படி இருக்க விரும்பினால், அப்படியே இருங்கள். ஆனால் டாலரை ஆதரிக்க, அமெரிக்காவை ஆதரிக்க, உங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளரை, அதாவது அமெரிக்க நுகர்வோரை விரைவில் ஆதரிக்க விரும்பம் தெரிவிப்பீர்கள். மேலும் உங்கள் மீதான 50 சதவீத வரியை தடை செய்ய வேண்டும் என கோருவீர்கள்.

அவர்கள் [இந்தியா] எந்தப் பக்கம் இருக்க விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், சீனர்கள் நமக்கு விற்பனை செய்கிறார்கள். இந்தியர்களும் நமக்கு விற்பனை செய்கிறார்கள். அவர்களால் ஒருவருக்கொருவர் விற்பனை செய்துகொள்ள முடியாது. நாம் உலகின் பெரிய நுகர்வோர். இதனை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும், நமது 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்தான் உலகின் நுகர்வோர் என்பதை உணர வேண்டும். எனவே இறுதியில் அவர்கள் அனைவரும் வாடிக்கையாளரிடம் திரும்பி வர வேண்டும், ஏனென்றால் இறுதியில் வாடிக்கையாளர் எப்போதும் சரியானவர் என்பது நமக்குத் தெரியும்.

ஆம், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில்... இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும். அவர்கள் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள், டொனால்ட் டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். மேலும், வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிக்கும் போது, மோடியை எவ்வாறு டீல் செய்ய வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்வார்” என்று அவர் கூறினார்.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/mTYkVLB
via IFTTT

Post a Comment

0 Comments