கரூர்,
கரூரில் த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கடந்த 16-ந்தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.அப்போது 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் கடந்த 19-ந் தேதி தீபாவளி விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே சி.பி.ஐ. தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் மனோகரன், சி.பி.ஐ. அதிகாரிகளின் வசதிக்காக மொழி பெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சென்றிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று கரூருக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் 2-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை மீண்டும் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விசாரணைக்காக ஆஜராக அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அவரிடம் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த விளக்கத்தை பதிவு செய்து கொண்டனர்.
விசாரணைக்கு வந்தபோது, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆவணங்களை இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் எடுத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டியவர்களுக்கு, விரைவில் சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/q9GxJhm
via IFTTT
0 Comments