தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என facebook விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர். பின்னர் அவர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அவரை இணைத்து அதில் ஒரு டிரேடிங் செயலி (Trading App) லிங்க் அனுப்பினர். அந்த ஆப் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி மேற்சொன்ன வாலிபரை நம்பவைத்து ரூ.85 லட்சம் பணத்தை மோசடி செய்தனர்.
இந்த மோசடி தொடர்பான வழக்கில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே ஒரு நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மேற்சொன்ன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான மகாராஷ்டிரா மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சயாஜி ரொகோகலே மகன் சந்திப் சயாஜி ரொகோகலே (வயது 33) மற்றும் டட்டு முஞ்சல் மகன் சோபன் டட்டு முஞ்சல்(37) ஆகிய 2 பேரை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கடந்த 19.11.2025 அன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்று கைது செய்து, தூத்துக்குடி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (22.11.2025) சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் மூலம் வருமானம் போன்ற இணையதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் உள்ள லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/MNYzXEF
via IFTTT
0 Comments