கோவை,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு கோவை ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் நின்ற அந்த ரெயில் பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் சென்னையை நோக்கி புறப்பட தொடங்கியது. அப்போது ரெயிலில் உள்ள எஸ்-3 பெட்டியில் ஒரு பயணி ஏறுவதற்கு முயன்றார். ஆனால் ரெயில் புறப்பட தொடங்கியதால், அந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது உடல் நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே சிக்கியது. இதில் அவரது கால் மற்றும் கை துண்டானது. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றதில் தவறி விழுந்து உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து உடனே தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரெயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து இறந்தது டெல்லியை சேர்ந்த மனோஜ்குமார் ஜெயின் (வயது 53) என்பதும், இரும்பு வியாபாரி என்பதும்,தொழில் விஷயமாக அடிக்கடி அவர் கோவை வந்து சென்றதும் தெரியவந்தது.
அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். தொழில் விஷயமாக நண்பர்களை சந்தித்து பேசி உள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்வதற்காக கோவையில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரெயிலில் முன்பதிவு செய்து வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு ரெயிலில் ஏறுவதற்காக ரெயில்நிலையத்துக்கு வந்தபோது ரெயில் புறப்பட்டதால், அவசர அவசரமாக அவர்,ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தான் ரெயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/ESiRvnX
via IFTTT
0 Comments