திருநெல்வேலியில் நாளை (20.12.2025), நாளை மறுநாள் (21.12.2025) என 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தல் மற்றும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவர் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். இந்த நிலையில் திருநெல்வேலிக்கு முதல்-அமைச்சரின் வருகையையொட்டி நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாநகரத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை (20.12.2025, சனிக்கிழமை) காலை 6 மணி முதல் நாளை மறுநாள் (21.12.2025, ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் டிரோன்கள் (Drone) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other unmanned aerial vehicles) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி அறிவித்துள்ளார். இதனை மீறும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/UInRMkq
via IFTTT
0 Comments