லக்னோ,
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 'தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்' என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி. போலீசாரால் கடந்த 2-4-2018 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை காவலில் இருந்த அவர் 9-4-2018 அன்று சிறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2019 ஜூலை மாதம் 23-ந்தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரின் வக்கீல் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றனர். அப்போது, அந்த கார் மீது லாரி மோதியதில் இளம்பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர்.
அந்த இளம்பெண்ணும், அவரது வக்கீலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கொல்வதற்காக குல்தீப் சிங் செங்கார் நடத்திய சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், இந்த வழக்குகள் டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் 2019 டிசம்பர் மாதம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், உன்னாவ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்பு ஆகிய குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
குல்தீப் சிங் செங்கார் 2017-ம் ஆண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து குல்தீப் சிங் செங்கார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உன்னாவ் பெண் பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்புடைய வழக்கில் இருந்து குல்தீப் சிங் செங்கார் விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பில் தொடர்பு உள்ளிட்ட குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் செங்காருக்கு டெல்லி ஐகோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு தண்டனை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது. ரூ.15 லட்சம் ஜாமீன் தொகை அளித்து விட்டு, ஜாமீன் பெற்று செல்லலாம் என்ற நிபந்தனையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரீஷ் வைத்யநாதன் சங்கர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். இந்த தீர்ப்பு பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறும்போது, தீர்ப்பால் வருத்தம் ஏற்பட்டு உள்ளது. மாமாவையும், தந்தையையும் அவர் கொலை செய்திருக்கிறார். சகோதரிக்கும் துன்பம் நேர்ந்துள்ளது.
அவரை அவர்கள் விடுதலை செய்கிறார்கள் என்றால், எங்களை சிறையில் அடையுங்கள். நாங்கள் உயிர் பிழைக்கவாவது செய்வோம் என கேட்டுள்ளார். அவருடைய அடியாட்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் பயத்துடனேயே வாழ்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், செங்காருக்கு சிறுமியின் தந்தை மரண வழக்கில் ஜாமீன் அளிக்கப்படவில்லை. இதனால், அவர் காவலிலேயே இருப்பார். இந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/wpLstl5
via IFTTT
0 Comments