செய்திகள்

சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக சென்னை போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியான முறையில் புத்தாண்டு விழாவை கொண்டாட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகர கடற்கரை பகுதிகள், வழிபாட்டுதலங்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

போலீஸ் குவிப்பு

புத்தாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 31-ந்தேதியன்று மாலை 6 மணி முதல் பாதுகாப்பு படை போலீசார் தங்கள் பணியை தொடங்குவார்கள்.

மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட 12 போலீஸ் மாவட்டங்களில் 425 இடங்களில் சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்படும்.

பைக் ரேஸ்

இதுதவிர 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதோடு 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 'பைக் ரேஸ்' நடத்தவிடாமல் தடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு குழுக்கள் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். 100-க்கும் மேற்பட்ட முக்கியமான கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் இதர வழிபாட்டு இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்படுவார்கள்.

31-ந்தேதி (இன்று) மாலை முதல் 1-ந்தேதி (நாளை) வரை பொதுமக்கள் கடலில் குளிக்கவோ, இறங்கி விளையாடவோ அனுமதி மறுக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் குதிரைப்படைகளில் ரோந்து சுற்றி வருவார்கள்.

இதற்காக மணலில் எளிதாக செல்லக்கூடிய வாகனங்களும் பயன்படுத்தப்படும். காவல் உதவி மையங்களும் மேற்கண்ட கடற்கரை பகுதிகளில் அமைக்கப்படும். டிரோன் கேமராக்கள் மூலம் மேற்கண்ட கடற்கரை பகுதிகள் கண்காணிக்கப்படும். ஆங்காங்கே மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால், பொதுமக்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்க மாற்று வழி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும், நீச்சல் படையினரும் தயார் நிலையில் இருப்பார்கள். கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படும்.

கடுமையான கட்டுப்பாடுகள்

நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நடைபெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு இதுதொடர்பாக உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நட்சத்திர ஓட்டல் கொண்டாட்டங்களில் சிறப்பு பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்தும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்ககூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர ஓட்டல் கொண்டாட்டங்கள் நடக்கும இடங்கள் தவிர மற்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும். இதேபோல, நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் சிறப்பு வாகனங்கள் மூலம் செயல்படும். பி.ஏ. சிஸ்டத்தோடு அதிகமாக ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலமும் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும்.

 பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை

புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தனியாக கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரிய போலீஸ் அனுமதி பெறவேண்டும். போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்பட்டால் போதை நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இதுதொடர்பாக வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வேலை வாய்ப்பு போன்றவை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம். பாஸ்போர்ட் பெறுவதற்கும் சிக்கல் ஏற்படலாம்.

எனவே, வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். விபத்து மூலம் உயிர்ப்பலி இல்லாத புத்தாண்டை கொண்டாட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியாக, இனிமையாக 2026 புத்தாண்டை வரவேற்று கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/oPgqBCM
via IFTTT

Post a Comment

0 Comments