புதுடெல்லி,
தாய்லாந்து, கம்போடிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 2 வாரங்களாக கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மோதலில் எல்லை பகுதியில் இருந்த விஷ்ணு சிலை இடிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘‘தாய்லாந்து- கம்போடியா எல்லை பிரச்சினை நீடித்து வரும் பகுதியில் அமைந்துள்ள இந்து தெய்வ சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை பார்த்தோம்.
இந்து மற்றும் புத்த தெய்வங்கள் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் ஆழ்ந்த பக்தியுடன் வணங்கப்படுகின்றன. இத்தகைய அவமரியாதையான செயல்கள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றன. அமைதியை மீட்டெடுக்கவும், உயிர் இழப்புகள் சேதங்களை தவிர்க்கவும், இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.
இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தாய்லாந்து அரசு கூறியிருப்பதாவது; சிலையை அகற்றும் நடவடிக்கையானது எந்த மதம், நம்பிக்கைகள் அல்லது எந்தவொரு புனிதமான அம்சங்களை அவமதிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. மாறாக தாய்லாந்தின் இறையாண்மையின் கீழ் உள்ள பகுதிகளை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இந்த சிலை தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையிலான பிரச்னைக்குரிய பகுதியில் அமைக்கப்பட்டது. தாய்லாந்து பகுதியில் சட்டவிரோதமாக இறையாண்மையை கோரும் நோக்கில் கம்போடிய வீரர்கள் அந்த சிலையை நிறுவினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/9xRTzf2
via IFTTT
0 Comments