நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடந்தது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.
அப்போது ரசிகர்கள், டிவிகே, டிவிகே (Tamilaga Vettri Kazhagam, தமிழக வெற்றிக்கு கழகம்) என ஆர்ப்பரித்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்களை நோக்கி இங்கு 'டிவிகே' கோஷம் வேண்டாம் என விஜய் சைகை செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
முன்னதாக ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனக்ராஜ், அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-
நான் ஒரு சிறிய மணல் வீடு கட்டும் நம்பிக்கையுடன் சினிமா துறைக்குள் வந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு அரண்மனையையே கொடுத்தீர்கள்.
என்னை பொறுத்தவரை, ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம். முதல் நாளில் இருந்து என்கூடவே இருந்தது என் ரசிகர்கள்தான். ஒருநாள்.. இரண்டுநாள் இல்லைங்க.. கிட்டத்தட்ட 33 வருஷத்துக்கு மேல என்கூடவே நின்னு இருக்காங்க.. அதனால் அடுத்த 30... 33 வருஷத்துக்கு அவங்ககூட நான் நிற்க முடிவு பண்ணியிருக்கேன்.
எனக்கு ஒண்ணுனா ரசிகர்கள் தியேட்டரில் நிற்குறாங்க.. நாளை அவங்களுக்கு ஒண்ணுனா அவங்க வீட்டுல போய் நிற்க முடிவு பண்ணியிருக்கேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய் ரசிகர்களுக்காகவே நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன். இந்த விஜய் சும்மா 'நன்றி'ன்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடன் தீர்த்துவிட்டுதான் போவேன்.
சில படங்களின் பெயர்களை கேட்டதும் மலேசியாவின் நினைவு வரும்... நண்பர் அஜித் நடித்த 'பில்லா' போல. நானும் `குருவி‘ போன்ற படங்களுக்கு வந்திருக்கிறேன். நமக்குதான் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆச்சே..
நான் அனிக்கு (அனிருத்) MDS என பெயர் வைக்கப் போகிறேன். Musical Departmental Store. அதை திறந்து உள்ளே போனால் என்ன வேண்டுமோ அதை எடுத்து வெளியே வரலாம். அனி என்னை ஏமாற்றியதே இல்லை. அது என் படமாக இருந்தாலும் சரி, மற்றவர்களின் படமாக இருந்தாலும் சரி... சிறந்த இசையை கொடுக்கிறார். படிப்படியாக ஏறி செல்கிறார்.
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால், உங்களுக்கு எப்போதும் நண்பர்கள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலிமையான எதிராளி நிச்சயம் தேவை. ஒரு வலிமையான எதிராளி இருக்கும்போது தான் நீங்களும் வலிமைமிக்கவராக ஆகிறீர்கள்.
விஜய் தனியா வருவாரா.. அணியா வருவாரா.. என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போதுகூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்சில்தான் கிக் இருக்கும்.
ஆகவே, 2026-ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது; மக்களுக்காக அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம். நன்றி, மலேசியா
இவ்வாறு அவர் கூறினார்.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/ur9azqQ
via IFTTT
0 Comments