சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் உள்ளனர். இதனால், ஜெயலலிதா வைத்துச்சென்ற வருமான வரி பாக்கித் தொகை ரூ.36 கோடியே 56 லட்சத்தை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூலை 23-ந்தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த நோட்டீசுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் தடை விதித்து உத்தரவிட்டது.
இதன்பின்னர், இந்த வழக்கு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ரூ.36.56 கோடி வரி கேட்டு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதாகவும், வருமான வரி பாக்கித்தொகையை ரூ.13 கோடியே 69 லட்சமாக குறைத்து மீண்டும் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. இதை பதிவு செய்த ஐகோர்ட்டு, ரூ.36.56 கோடி கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ரூ.13.69 கோடி கேட்டு அனுப்பிய புதிய நோட்டீசை எதிர்த்து ஐகோர்ட்டில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதாவின் மற்றொரு வாரிசான ஜெ.தீபக்கை இணைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.தீபக் தரப்பில் தன்னையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஏற்று கொண்டார். ஜெ.தீபக்கை ஒரு மனுதாரராக வழக்கில் சேர்த்துக் கொண்டார். ஜெ.தீபக் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எல்.சுதர்சனம், “ரூ.13.69 கோடி வரிப்பாக்கித் தொகையை தவணை முறையில் கூட செலுத்தலாம் என ஜெ.தீபக்கிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை ஏற்றுக்கொண்டு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான தவணைத் தொகையை ஜெ.தீபக் செலுத்தி விட்டார். மீதத் தொகையையும் செலுத்த உள்ளார்” என்றார்.
இதையடுத்து, வருமான வரித்துறை நோட்டீசை எதிர்க்கும் ஜெ.தீபாவின் பிரதான வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/s4QP3hm
via IFTTT
0 Comments