சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கரூர் மாவட்டம் தோகை மலை அருகே சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை உணவு திட்ட சமையல் பணியில் ஈடுபட்டிருந்த 35 வயது பெண், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறிந்து நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை முன்னிலைப்படுத்தி பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் தமிழக அரசு, கரூரில் நிகழ்ந்துள்ள இந்த வன்கொடுமை பிரச்சினையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இதேபோல மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள நல்லமணி அரசு உதவி பெறும் பள்ளிக்கு அருகில் ஆர்.எஸ்.எஸ். கிளை நடத்தப்பட்டதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு எழுந்து, காவல் துறை அங்கே சென்று மாணவர்களிடம் மதவெறி ஊட்டப்படுவதைத் தடுத்துள்ளது. இதுகுறித்து, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவெறிக்கும், மதவெறிக்கும் இடமில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும். புத்துலகின் மாதிரி வடிவமாக, பெரியார் காண விரும்பிய சமத்துவ உலகமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/sJYVrB6
via IFTTT
0 Comments