சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி மு க அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோம் என்று அறிவித்தார். அதன்படி அவர், கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் எனவும் பெயரிடப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் முதலில் ஒரு கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனாலும் அரசு அறிவித்த விதிமுறைகளின்படி 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெண்கள் தேர்வு ஆனார்கள். எனவே முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் இவர்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும், அவர் விடுபட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யவும், புதிதாக பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்தார். அதன் தொடர்ச்சியாக பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதனால் இதன் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால், இப்போது அதில் புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 2024, 25-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ,13 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/WsUkFBi
via IFTTT
0 Comments