சென்னை,
2024 ஜே.இ.இ தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டி-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
நாடு முழுவதும் உள்ள முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு கூட்டு நுழைவுத் தேர்வு எனப்படும் ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடும் போட்டி நிறைந்த இந்தத் தேர்வு பல்வேறு அமர்வுகளாக ஆன்லைன் முறையில் நடைபெறும்.
ஜே.இ.இ தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்.ஐ.டி-ல் மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NITயில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/F1swGdx
via IFTTT
0 Comments