போக்குவரத்து நெரிசல்


போக்குவரத்து நெரிசல்
சாலைத் தடைகள்.

பயணத் தடங்கல் 
பாவம் மக்கள்.

நடை மறந்த
நாகரீக மனிதனின்
நேரம்.

தடையாய்ப் பயணம்
தவிர்க்க முடியா
கோரம்.

வாகனங்களின்  நெரிசல்
மக்களுக்கு நேர விரிசல்.

ஊர்ந்து செல்லும்
பேருந்துப் பயணம்.

சிங்காரச் சென்னையின்
தீராத அவலம்.

வாகனப் பெருக்கத்தால்
தடங்கள் யாவும்
தடங்கல்கள்.

இண்டு இடுக்குகள் எல்லாம்
இருசக்கர வாகனங்கள்.

கொஞ்சம்
சந்து கிடைத்து விட்டால்
முந்துகிறது ஆட்டோ.

உள்ளிருக்கும் பயணிகளோ
உழைக்காமல் சிந்துகிறார் வியர்வை.

அலுவலகம் செல்வோரின் 
பார்வை 
அடிக்கடி கடிகாரத்தில்.

எண்ணத்தில்
தன் அதிகாரியும்
தடங்களில்
நீந்த வேண்டுமென்று
வேண்டுவதே வேலை.

நீண்ட வரிசையில்
நிற்கும் வாகனக் குழந்தைகள்.

வெறுப்பைக் காட்டும்
பின்பக்கச்
சிவப்புக் கண்கள்.

முன்பக்கம்  வழிகேட்டு
அலறும் ஹாரன்கள்.

சிக்னல்களில் சிக்கி 
சின்னாபின்னமாகும்
சரக்கு வண்டிகள்.

பாதை அதே.
நீள்வதோ பயணம்.
மீள்வது எப்போது?

காத தூரம் எனினும்
காலார நடப்பதில்லை.

வேலை கிடைத்தவுடன்
மாத தவணை என்ற
மந்திரத்தால்
மயங்கி விழுவது.

வங்கியில் கடன் பெற்று
வாங்கி விடுவது
வாகனம்.

அடுத்த வீட்டாரின்
வயிற்று எரிச்சலுக்காக
எரிபொருள் நிரப்பி
எடுக்க வேண்டிய கட்டாயம்.

சொகுசாய் சென்று
சோம்பலாகி விட்டபின்
முழுதாய் நீயும்
முடங்குவாய் நாளும்.

இவ்வாறே நீள்கிறது
இயக்கத்தில் வாகனங்கள்...

வாகனங்களால் நீள்கிறது
வாழ்க்கையின் பயணங்கள்
தடங்கல்களால்...

Post a Comment

0 Comments