பெங்களூரு,
இந்தியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் ஐ.பி.எல். தொடரில் முதன் முறையாக குஜராத் டைட்டண்ட்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.
தன்னுடைய அறிமுக சீசனில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஒரு போட்டியின்போது கடைசி ஓவரை வீசிய அவரது பந்துவீச்சில் 5 சிக்சர்களை விளாசி ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடித்தந்திருந்தார். அந்த போட்டியோடு குஜராத் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.
இருப்பினும் குஜராத் அணியிலிருந்து வெளியேறிய அவரை கடந்த ஆண்டு பெங்களூரு அணி 5 கோடி ரூபாய்க்கு மினி ஏலத்தில் வாங்கியது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திய யாஷ் தயாள் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி பெங்களூரு அணி பிளே ஆப் சுற்று வரை செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.
இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதிய நேரத்தில் புதிய உத்வேகத்தை பெற்றதில் விராட் கோலிக்கு பெரிய பங்கு இருப்பதாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் தற்போது கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுகிறேன் என்றால் அது விராட் கோலியால் மட்டும்தான். ஏனெனில் குஜராத் அணியிலிருந்து ஆர்.சி.பி அணிக்கு வந்த போது நான் உத்வேகம் குன்றி காணப்பட்டேன். அப்போது விராட் கோலி தான் அந்த தொடர் முழுவதுமே எனக்கு ஆதரவாக நின்று பல்வேறு அறிவுரைகளை கூறியது மட்டுமின்றி எனக்கு துணையாகவும் இருந்தார்.
நான் புதிதாக ஒரு அணிக்கு வந்திருக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு அவர் என்னை அருகில் இருந்து பார்த்துக் கொண்டார். எந்த ஒரு சூழலிலும் எனக்கு ஆதரவாக அவர் இருந்ததால் என்னுடைய ஆட்டம் சிறப்பாக மாறியது. விராட் கோலி குறித்து தொலைக்காட்சிகளில் சிலர் சொல்வது போல் எல்லாம் அவர் கிடையாது. இளம் வீரர்களுக்கு எப்போதுமே அவர் உறுதுணையாக நிற்கக்கூடியவர். இவ்வாறு அவர் கூறினார்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/WSqODsk
via IFTTT
0 Comments